கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர் கைது

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜோதிமாறன் (25 வயது). இவரது மனைவி சரண்யா (23 வயது). இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரண்யாவின் தந்தை ராஜேந்திரன் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் சரண்யாவை அவருடைய கணவர் ஜோதிமாறன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதில் மனமுடைந்த சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை வாங்க மறுத்து சரண்யாவின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோதிமாறனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுடன் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமாறனை கைது செய்தனர். சரண்யாவுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது தொடர்பாக சீர்காழி உதவி கலெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.