தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

தூத்துக்குடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த இளம்பெண்ணுக்கு, திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 26). இவர் கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் மகாலட்சுமி(21) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதியருக்கு தற்போது ஒன்றரை (1 1/2) வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்பு மகாலட்சுமி தனது மாமியார் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு குடும்ப சண்டைகள் தொடர்ந்து வந்துள்ளன.

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே கணவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாமியார் ஆகிய 2 பேரும் மகாலட்சுமியை கடுமையாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மகாலட்சுமி, தனது படுக்கையறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாமியார் கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து எந்தவித பதிலும் வராததால், அவரது கணவர் மீனாட்சிசுந்தரம் படுக்கையறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோட்டாட்சியர் விசாரணை

இதற்கிடையே மகாலட்சுமியின் தாயார் சுப்புலட்சுமி அளித்த புகாரில், "எனது மகள் மாமியார் மற்றும் கணவர் கொடுத்த டார்ச்சரைத் தாங்க முடியாமல் இறந்துவிட்டாள். அவளது சாவில் பெரும் மர்மம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இறந்த மகாலட்சுமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.