தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் பெயிண்டர் ஒருவர் தனது நண்பருடன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த சாலையில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பெயிண்டர் மீது மோதுவது போல் சென்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கால்டுவெல்காலனி 1-வது தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் அனந்தகுமார் (வயது 26), பெயிண்டிங் கூலி தொழிலாளி. கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இரவு அனந்தகுமாரும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஞானமணி மகன் இசக்கிதுரை(43) என்பவரும் வள்ளிநாயகபுரம் 4-வது தெரு சந்திப்பில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தச் சாலையில் அவர்களுக்கு எதிரே, பிரையண்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் இசக்கி(32) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அனந்தகுமார் மீது பைக் மோதுவது போல் வந்ததால், அதிர்ச்சியடைந்த அனந்தகுமார் பைக் ஓட்டி வந்த இசக்கியை சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இசக்கி, வண்டியை நிறுத்திவிட்டு அனந்தகுமாரைப் பார்த்து, ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, அருகில் கிடந்த கூர்மையான ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை எடுத்து அனந்தகுமாரின் இடது பக்கத் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதைத் தடுத்த அவரது நண்பர் இசக்கிதுரையையும் அந்த வாலிபர் கைகளால் இடது முன்கையில் பலமாக அடித்துக் காயப்படுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சத்தம் போடவே, அங்கிருந்தவர்களை பார்த்து பயங்கரமாகக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இசக்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தலையில் பலத்த காயமடைந்த அனந்தகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கியை கைது செய்தனர்.