தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது

தூத்துக்குடியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். சென்டருக்குள் சென்ற வாலிபர் ஒருவர், ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம். எந்திரத்தின் வெளிப்புற கதவை உடைத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவர்புரம் ரோட்டில் இந்தியன் வங்கி மற்றும் ஏ.டி.எம். சென்டர் உள்ளது. நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் சைக்கிளில் வந்து பேங்க் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஏ.டி.எம். சென்டருக்குள் சென்று ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம். எந்திரத்தின் வெளிப்புற கதவை உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக வங்கியின் மேனேஜருக்கு சர்வர் மூலம் அலாரம் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் உடனடியாக வங்கிக்கு சென்றனர்.

அப்போது வங்கி ஏ.டி.எம். சென்டர் உள்ளே இருந்த வாலிபரை பிடித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி கணேசன் காலனி 2-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (வயது 22) என்பது தெரியவந்தது.

மேலும் இவருடன் யாராவது வந்தார்களா? என்று சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இவர் மட்டும்தான் கேமராவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. இவர் மட்டுமே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது. மேலும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சத்துக்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் தூத்துக்குடி ராஜிவ்நகர் 1வது தெருவில் வசித்து வரும் முருகன் மகன் பிரபு(35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.