தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் தங்க நகைகள் திருட்டு: வாலிபர் கைது

தூத்துக்குடியில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் யாரும் இல்லாதபோது, மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டின் கதவை உடைத்து 4¾ சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகணேசன் (வயது 36), ஆட்டோ ஓட்டுனராக தொழில் செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை அவர் தனது ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி புதியமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந்தது.

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு:

மதிய நேரத்தில் பாலகணேசன் சவாரி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க தலைவாசல் கதவை திறக்க முயன்றபோது, அது உள்பக்கமாக பூட்டப்பட்டு, திறக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

வாலிபர் கைது, நகைகள் மீட்பு:

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில், மாப்பிள்ளையூரணி, பூபாண்டியபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் இசக்கிமுத்து(எ) யோகீஸ்வரன்(18) இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 4¾ சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.