தமிழக செய்திகள்

மாமனார் வீடு புகுந்து 2 பைக்குகள் அரிவாளால் வெட்டி சேதம்: வாலிபர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 10-வது தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பேச்சிமுத்து (வயது 29), பெயிண்டிங் தொழிலாளி. பேச்சிமுத்துவின் தங்கைக்கு, தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7-வது பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த பிரியந்தகுமார் மகன் மணிகண்டன்(28) என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பிரையண்ட்நகரில் உள்ள தனது தந்தை மற்றும் அண்ணன் பேச்சிமுத்துவின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மணிகண்டன், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பரான பழனி என்பவருடன் சேர்ந்து, பிரையண்ட்நகர் 10-வது தெருவில் உள்ள பேச்சிமுத்துவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

இதனை கண்டித்த மைத்துனர் பேச்சிமுத்து மற்றும் அவரது தந்தை நடராஜன் ஆகிய 2 பேரையும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகிய 2 பேரும் கைகளால் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதில் பேச்சிமுத்துவுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் பழனியை போலீசார் தேடி வருகின்றனர்.