தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் அடகுக்கடை நடத்தி 300 சவரன் நகை மோசடி: வாலிபர் கைது

கன்னியாகுமரியில் ஒரு நகை அடகு கடையில், அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது அந்த கடை பூட்டப்பட்டு இருந்ததோடு, கடை நடத்தியவர்கள் தலைமறைவாகியதும் தெரிய வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், முள்ளங்கினாவிளை பகுதியில் நகை அடகுக்கடை நடத்தி வந்த சைலஸ் (வயது 52), அவரது மனைவி நிர்மலா(45) மற்றும் மகன் அகில் எஸ்.விகானோ(27) ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது கடை பூட்டப்பட்டு இருந்ததாகவும், கடை நடத்தியவர்கள் தலைமறைவானதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கோவையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த அகில் எஸ்.விகானோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் 75 பேரிடம் 300 சவரன் நகைகள் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. கைது செய்யப்பட்ட அகில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரைக் போலீசார் தேடி வருகின்றனர்.