சென்னை,
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 வயது). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் 'சின் செயின்' என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பிய யோகானந்த், மோசடி நபர்கள் கூறிய சுமார் 13 வங்கி கணக்குகளில் பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 330 வரை முதலீடு செய்துள்ளார்.
ஆனால் முதலீடு செய்த பணத்துக்கு லாபம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யோகானந்த், மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (35 வயது) என்பவர் போலியான நிறுவனத்தை தொடங்கி, ஒரே நிறுவனத்தின் பெயரில் பல்வேறு ஊர்களில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்குகளை தொடங்கி அவற்றை ஆன்லைன் டிரேடிங் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆவடி சைபர் கிரைம் போலீசார் அன்பழகனை கைது செய்தனர்.