தமிழக செய்திகள்

ஜவுளி கடை பெண் ஊழியருக்கு காதல் தொல்லை; வாலிபர் கைது - சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த 20 வயதுடைய பெண் ஒருவர் சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அவரது ஊரை சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்துள்ளார். பின்னர், அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் காதல் உறவை முறித்துள்ளார்.

காதல் தொல்லை

எனினும் அவருக்கு வினோத்குமார் தொடர்ந்து செல்போன் மூலம் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 18-ந்தேதி அன்று அந்த பெண் வேலை பார்க்கும் கடைக்கு வந்துள்ளார். கடையின் மேலாளரிடம் 'இது நான் காதலிக்கும் பெண். இவரை நான் அழைத்து செல்ல உள்ளேன்' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை

பின்னர், அந்த பெண் வேலை முடிந்து தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை வினோத்குமார் வழிமறித்து காதல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விரைந்து வந்தனர். வினோத்குமாரை பிடித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.