தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கடமானை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்ததால் சிக்கினார்.
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தை பகுதியில் மிளா, மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை தேடி கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடமான் (மிளா) ஒன்றை வேட்டையாடிய வாலிபர் ஒருவர் தானாகவே வனத்துறையினரிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
வீரகேரளம்புதூர் தாலுகா வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுரேஷ் (26 வயது). இவர் சமீபத்தில் முள்ளிமலை பொத்தை பகுதிக்கு சென்று கடமான் ஒன்றை வேட்டையாடி உள்ளார். பின்னர் துண்டுகளாக வெட்டப்பட்ட கறியை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். இந்த தகவல் வைரலாக பரவிய நிலையில் வனத்துறையினரின் கவனத்துக்கு வந்தது.
இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்று சுரேஷை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடமான் வேட்டையில் மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான அவர்களையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.