தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் சிறுவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மணிகண்டனைச் சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அடைக்கப் பயன்படும் 10 'ஜிப் லாக்' கவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மணிகண்டனை சிறையில் அடைத்தனர்.