தமிழக செய்திகள்

19 வயது இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

சென்னையில் 19 வயது இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவரை வாலிபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பராக்கா ரோடு பகுதியில் வசித்து வருபவர் அரிஷ்குமார் (வயது 65). இவர் திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அரிஷ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், முதியவர் அரிஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 27 வயது வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் முதியவர் அரிஷ்குமார், தன்னை காதலிக்கும்படி கூறி 19 வயது இளம்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். பாதிப்பட்ட இளம்பெண், கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது முதியவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறி கத்தியை காட்டி மிரட்டியதுடன், லேசாக உடலை கிழித்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன் பிறகும் முதியவர் அரிஷ்குமார், இளம்பெண்ணிடம் காதல் வசனங்கள் பேசி, தன்னை காதலிக்கும்படி கூறி தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த இளம்பெண்ணின் உறவினரான 27 வயது வாலிபர், வீடுபுகுந்து அரிஷ்குமாரை வெட்டியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.