தமிழக செய்திகள்

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை - வாலிபர் கைது

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் துரைராஜ் (26 வயது). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று துரைராஜ், சின்னசேலம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று, அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவரை அழைத்துள்ளார்.

அவருடைய பேச்சை நம்பி மாணவி, அவருடன் சென்றுள்ளார். ஆனால் துரைராஜ், மாணவியை தனது நிலத்தில் உள்ள கொட்டகைக்கு அழைத்து சென்று அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் மாணவியை மீண்டும் பள்ளியில் விட்டுவிட்டு துரைராஜ் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரியர் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.