திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல் காலனி பகுதியில், முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை முக்கூடல் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே பொட்டல் காலனியைச் சேர்ந்த பால்துரை (வயது 25) என்பவருக்கும், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணி(25) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மணி என்பவர் பதிவு எண் இல்லாத பைக்கில் வந்து, பால்துரையின் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதுடன், பால்துரையை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, முக்கூடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வேம்பு மகன் மணியை இன்று கைது செய்தனர். பின்னர் மேற்சொன்ன வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.