தமிழக செய்திகள்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை - 5 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ஆசிக் ரகுமான் (வயது 24). நேற்று முன்தினம் இவர், 500 பிளாட் பகுதியில் ஒரு வீட்டின் உள்ளே திடீரென நுழைந்து கதவை உள்பக்கமாக பூட்டினாராம். வீட்டில் இருந்த பெண்கள் அவரை பார்த்ததும் அலறினர்.

பலத்த காயம்

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரிஸ்வானை வெளியே அழைத்து வந்து தாக்க முயன்றனர். உடனே அவர் வீடு வீடாக சென்று என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூறி கதறி அழுதார். இருப்பினும் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீவிர விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரிஸ்வானை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

அதில் 500 பிளாட் பகுதியை சேர்ந்த சீனி ஹமீது (45). ஹாஜா முஹைதீன் (42), அமீர் அப்துல்லா (41), முகமது ஆதில் (27), புதுத்தெரு நூர்முகமது (76) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT