கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.6.95 லட்சம் மோசடி

சிவகங்கையை சேர்ந்த தம்பதி நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

சிவகங்கை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பு செல்வம் (34 வயது). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் பேசிய சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதி நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அவரும் அவர்கள் கூறியபடி பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் அன்பு செல்வத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலா விசா மூலம் துபாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து நியூசிலாந்துக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி நியூசிலாந்துக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால் அன்பு செல்வம் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், கணவன்- மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.