சேலம்,
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (28 வயது). இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் விற்பனை செய்கிறோம் என்று என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். இதை நம்பி அந்த நிறுவனத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த தமிழரசன் என்பவர் தன்னை மேலாளர் என்று என்னிடம் அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார்.
மேலும் அவர், பாகல்பட்டி பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டுமனையை காண்பித்ததுடன், மோகன்ராஜ் என்பவர் மூலம் கடன் வாங்கி கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். மேலும் அவர் கடன் தொடர்பான ஆவணங்களை பனமரத்துப்பட்டியை சேர்ந்த நீலகண்டன் (36 வயது), குருபிரசாத் ஆகியோரிடம் வழங்கி ரூ.9 லட்சத்து 91 ஆயிரத்து 741 கடன் வாங்கி கொடுத்தார்.
இதற்கிடையில் என்னிடம் தமிழரசன் தனது கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதுடன், வீட்டுமனைக்கான தவணை தொகையை நிறுவனமே செலுத்திவிடும் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி நான் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.44 லட்சத்து 45 ஆயிரத்து 436 கடனாக பெற்று அந்த தொகையை, அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தினேன்.
பின்னர் அந்த தொகையை திருப்பி கேட்டபோது, நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுவதாக கூறி பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். எனவே என்னிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக நேற்று நீலகண்டன், காடையாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் (34 வயது) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.