தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முனியசாமி(எ) சுரேஷ் (வயது 36). திருமணம் ஆகாத இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சுரேஷ் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் காதல் தோல்வி அல்லது காதல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பதிவுகளையும், ஸ்டேட்டஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் அவர் முத்தையாபுரம் பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள ஒரு வேப்ப மரத்தில், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு, உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குடும்ப தகராறுகள் உள்ளதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.