தமிழக செய்திகள்

தாய் இறந்த துக்கத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல், மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே, பல்லடம் சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. நேற்று காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் இந்த மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் எதிரே, மேற்குபுறம் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அவர் ஏறினார்.

அதன்பிறகு கண் இமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். சுமார் 40 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் குதித்ததில், சாலையில் மோதி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். அந்த வழியாக சென்ற மக்கள், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையே தற்கொலை செய்த வாலிபரின் பையில் செல்போன் ஒன்று இருந்தது. அந்த செல்போனும் சேதமாகியிருந்தது.

அந்த செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து, மற்றொரு செல்போனில் பொருத்தி, அதில் இருந்த நம்பரில் ஒருவருக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் கோவை குனியமுத்தூரை சேர்ந்த அப்துல் நாசர் மகன் முகமது பயாஸ் (28 வயது) என்பது தெரிய வந்தது. இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருப்பூர் வந்து, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செருப்பு கடையில் ஊழியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு முகமது பயாசும் தங்கியிருந்து தினமும் செருப்பு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். முகமது பயாசின் தாய், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனது தாயார் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த முகமது பயாஸ் நேற்று காலை மேம்பாலம் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.