வெம்பாக்கம்,
வெம்பாக்கம் அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
வெம்பாக்கம் தாலுகா ஹரிஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 20). இவர் நேற்று முன்தினம் மதியம் வட மாவந்தல் கிராமத்தில் உள்ள வயலில் அறுவடை செய்ய சென்றார். அங்கு எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடந்தது.
இதற்காக ஹரிஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அறுவடை எந்திரம் எடுத்து வந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நாகராஜ் அறுவடை எதிரத்தை தான் இயக்க வேண்டும் என கேட்டார். அதற்கு மோகன்ராஜ் மறுத்து எந்திரத்தின் மோட்டாரை 'ஆப்' செய்தார். ஆனால் கீழே இருந்த 'கன்வேயர் பெல்டை' அவர் 'ஆப்' செய்யவில்லை என தெரிகிறது.
அந்த பெல்ட்டில் நாகராஜனின் சட்டை சிக்கிக்கொண்டு இழுத்ததால் கை கால்களில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு நாகராஜன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வரதன் என்பவர் தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.