திருச்சி,
சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக பிரகாஷ் (வயது 30) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாஸ்மாக் கடை வாசலில் பிரகாஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.