தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர், வண்ணாரப்பேட்டை ஆனந்த்நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (வயது 21). மீனவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாரிசெல்வம் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தாளமுத்துநகர் நேரு நகரில் உள்ள ஒரு கெபி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பைச் சேர்ந்த சண்முககணேசன் மகன் சந்தனராஜ்(21) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சந்தனராஜ், மாரிசெல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது இடிப்பது போல் வண்டியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தனராஜை கையால் சரமாரியாக தாக்கியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து தனித்தனியே அனுப்பி வைத்தனர். மாரிசெல்வம் தன்னை தாக்கியதால் கடும் ஆத்திரமடைந்த சந்தனராஜ், அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களான அண்ணாநகர் 12-வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார்(20), ஆனந்த்நகரை சேர்ந்த ராபர்ட் மகன் ஜாய்சன்(20) மற்றும் நேரு நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் ஹரிகரன்(20) ஆகிய 3 பேருடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மாரிசெல்வத்தைப் பழிவாங்கும் நோக்குடன் தீவிரமாக தேடி அலைந்துள்ளனர்.
அப்போது, நேருநகர் கெபி அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்த மாரிசெல்வத்தை 4 பேரும் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரிசெல்வம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சந்தனராஜ், அவரது நண்பர்களான ஜாய்சன் மற்றும் ஹரிகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள புவனேஷ்குமார் என்ற வாலிபரைத் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.