தமிழக செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கழுகுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த சின்னமாரியப்பன் மகன் செல்வக்குமார் (வயது 24), கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கழுகுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து சொந்த ஜாமீனில் வெளியே வந்த செல்வக்குமார், கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரியாகப் பேசாமலும், வேலைக்குச் செல்லாமலும் இருந்துள்ளார். மேலும் அவர் மீண்டும் மது அருந்திவிட்டுப் பலரிடம் தகராறு செய்ததால், அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் கடும் மனவேதனை அடைந்த செல்வக்குமார், நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார், செல்வக்குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.