தமிழக செய்திகள்

ஆலங்குளம் எஸ்.ஐ-யால் சுடப்பட்ட இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை: உறவினர்கள் குற்றச்சாட்டு

உரிய சிகிச்சையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக கூறியுள்ளனர்

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் மணிகண்டன் (வயது 35), விவசாயி. இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் மணிகண்டன் கள் இறக்கியதாக எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் காலை ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர்.

அப்போது தோட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, விவசாயி மணிகண்டனை துப்பாக்கியால் இரு கால்களிலும் சுட்டார். மேலும் அவர் சுட்ட 2 குண்டுகளில் இருந்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் தந்தை பெருமாள் சேட், அவரது சகோதரர் சிவ பொன்ராஜ், மகள் பிரதீபா (17) உள்ளிட்டோர் மீது படாமல் மயிரிழையில் அவர்கள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் உறவினர்கள் ஆலங்குளத்தில் காமராஜர் சிலை முன்பு திரண்டு நடத்திய போராட்டத்தினால் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா உள்ளிட்ட 3 போலீசார் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவிட்டார்.

இதனிடையே துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் அவருக்கு முதலுதவி சிகிச்சையைத் தவிர அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்போது வரை அவரது காலில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அவரது நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி மருதம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் அனைவரும் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

உரிய சிகிச்சையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற 11-ந்தேதி கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.