தூத்துக்குடி,
தூத்துக்குடி அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கருப்பசாமி (வயது 33). இவர் அங்குள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கருப்பசாமிக்கும் அண்ணாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(24) என்பவருக்கும் மது அருந்துவது தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வெங்கடேஷ், கருப்பசாமியை கொலை செய்துவிடுவதாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 9-ம் தேதி இரவில் அண்ணாநகர் 8-வது தெருவில் கருப்பசாமி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பரான முனியசாமி மகன் அரவிந்தன்(21) ஆகிய 2 பேரும் கருப்பசாமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றிய நிலையில், அருகில் கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தலையில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து வெங்கடேஷ், அரவிந்தன் ஆகிய 2 பேரை கைது செய்து பேருரணி சிறையில் அடைத்திருந்தார். தற்போது கருப்பசாமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.