தூத்துக்குடி,
தூத்துக்குடி பாரதிநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர் தேவராஜ்(26) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பிரையண்ட்நகர் 10-வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், தினேஷின் வாகனத்தை வழிமறித்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி தினேஷை மிரட்டிய அந்த நபர்கள், அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட தினேஷ், இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த 2 நபர்கள் யார்? அவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.