நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சக்திவேல் (22 வயது). பொக்லைன் டிரைவரான இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக வேலைக்கு சென்று இருந்தார்.
அப்போது அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கும், சக்திவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சக்திவேல் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி உள்ளார். இதையடுத்து அந்த மாணவி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி தனது தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கு வந்தார்.
பின்னர் சக்திவேல் அந்த மாணவியை திடுமல் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நிலை சரியில்லை என்று அந்த மாணவி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.