தமிழக செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் - போக்சோவில் கைது

விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர், சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கழனிபாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சுபாஷ் (27 வயது), சமையல் மாஸ்டர். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் சுபாஷ் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதேபோன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியின் வீட்டிற்கு சுபாஷ் அவ்வப்போது சென்று நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, பெற்றோர் பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுபற்றி மகளிடம் விசாரித்தார். அப்போது, அவர் கடந்த ஓராண்டாக சுபாஷை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சுபாஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கந்தனேரி கூட்ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த சுபாஷை, போலீசார் கைது செய்தனர்.