கோவை,
கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கொடுரமாகத் தாக்குதல் நடத்தினர்.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்கபாறை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரின் மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள், அந்த மாணவியின் அடையாள அட்டையை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்று தொல்லை கொடுத்துள்ளனர்.
எனவே மாணவியின் தந்தை சிவக்குமார் நேரில் சென்று சூர்யாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் கொண்ட கும்பல், சிவக்குமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும் அவர்கள் சிவக்குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாகத் தாக்கினர்
தடுக்க வந்த குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி சிவக்குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், சூரியா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தங்களை தாக்கியதுடன், வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.
ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் சிவக்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.