தமிழக செய்திகள்

யூடியூபர் மாரிதாஸ் கைது: நயினார் நாகேந்திரன் கண்டனம்

பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கைது

தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்-அமைச்சர் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது.

தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா?

விடுதலை செய்ய வேண்டும்

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட மாரிதாஸ் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.