தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்த வெற்றியின் உற்சாகத்தில் விஜய், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். ஆனால் ஆளுநர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்று, 5 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற கட்சிகள் தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. இந்த முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்ற கூற்றுக்கு ஏற்ப, இதுவரை அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இதனை தி.மு.க. தரப்பு மறுத்துள்ளது. அதேசமயம், அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை எந்த வெளிப்படையான பதிலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளில் ஒருவரான நிர்மலா பெரியசாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதுபோன்ற தகவல்கள் அனைத்தும் வதந்தியே” என்றார்.