தமிழக செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜர்

சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

த.வெ.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.

அப்போது டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்த தாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மத்திய அரசின் விசாரணை முகமையான அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு டாக்டர் விஜயபாஸ்கர் மற் றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் டாக்டர் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது.

இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பில் டாக்டர் விஜயபாஸ்கருக்கும், அவருடைய மனைவி ரம்யாவுக்கும் விசாரணைக்கு 17-ம் தேதி (அதாவது இன்று) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், சம்மனை ஏற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT