சென்னை,
மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் கடந்த 11-ம் தேதி ஏராளமானோர் பூங்கா ரெயில் நிலையம் வந்து, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்றும், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே, அழிக்காதே அழிக்காதே தமிழை அழிக்காதே என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் தாங்கள் கையில் வைத்திருந்த கருப்பு 'ஸ்பிரே' மூலம் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்த பெயர் பலகையில் இந்தியில் எழுதிய எழுத்துகளை அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்து அங்கு ரெயில்வே பாது காப்பு படையினர் விரைந்தனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட சிவக்குமார், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் முன் திடீரென குதித்தார். இதில் தலை, கை,கால்களில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது ரெயில் முன் பாய்ந்து படுகாயமடந்த சிவக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிவக்குமர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 11-ந் தேதி அன்று மே 17 இயக்க நிர்வாகி சிவக்குமார் வெளியிட்ட கடைசி எக்ஸ் பதில், தமிழ் வாழ்க!.. இந்தி ஒழிக!... உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! என குறிப்பிட்டிருந்தார். இதுதற்போது வைரலாகி வருகிறது.