சென்னை,
உறுப்பு தானத்திற்கும், உடல் தானத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உறுப்பு தானம் என்பது, ஒருவர் மூளைச்சாவு அடைந்த பிறகு கண்கள், சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை எடுக்கப்பட்டு, தேவையான நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு கொடுப்பது ஆகும்.
உடல் தானம் என்பது, ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு கொடுப்பது ஆகும். தானம் பெறப்பட்ட உடல் மூலம் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
உடல் தானம் செய்யப்பட்டவரின் சடலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவுடன், சிதைவடையாமல் இருக்க பார்மால்டிஹைடு என்ற திரவம் ரத்த நாளங்கள் வழியாக செலுத்தி உடல் பதப்படுத்தப்படும்.
மருத்துவ மாணவர்கள் மனித உடல் பாகங்கள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் குறித்து நேரடியாக கற்றுக்கொள்ள இந்த உடல்கள் உடற்கூறியல் வகுப்புகளில் பயன்படுத்தப்படும்.
மேலும், புதிய அறுவை சிகிச்சை முறையை கண்டறியவும், சிக்கலான நோய்களுக்கான தீர்வுகள் குறித்த ஆய்வு செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் இந்த உடல்களை பயன்படுத்துவார்கள்.
சில ஆண்டுகள் கழித்து ஆய்வுகள் முடிந்த பிறகு உடலின் எஞ்சிய பாகங்கள் முறைப்படி தகனம் செய்யப்படும். குடும்பத்தினர் விரும்பினால் சாம்பல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல் தானம் செய்வதற்கான உடற்கூறியல் சட்டம் இந்தியாவில் 1948-ம் ஆண்டு இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.