சென்னை,
உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 30-ஐ தாண்டும் சூழல்களில் பயன்படுத்துவதற்காக 20 கூடுதல் சுயேச்சை சின்னங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் வழங்கல்) ஆணை, 2025-ன் விதிகளின்படி, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 30-ஐ மீறும் இடங்களில் கூடுதல் சின்னங்கள் தேவைப்படுவதால், அனைத்து உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கூடுதல் சுயேச்சை சின்னங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டையாளர், மணி, பாலம், கேக், கால்குலேட்டர், கேமரா, கேரட், கிரிக்கெட் ஸ்டம்ப், டீசல் பம்ப், உறை, வறுசட்டி, ஐஸ்கிரீம், ரம்பம். இஸ்திரிப் பெட்டி, மிக்சி, பிரஷர் குக்கர், கூடாரம், கோடரி. கண்ணாடி டம்ளர் மற்றும் கத்தரிக்கோல் ஆகிய 20 சின்னங்கள் கூடுதல் சுயேச்சை சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் தொடர்பான முந்தைய அறிவிப்பிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பட்டியல் எண் 4-ல் இடம்பெற்றுள்ள சின்னம் "தொலைக்காட்சிப் பெட்டி" (டி.வி.) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.