சென்னை
சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசியதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். விஜய் குறித்தும் சில கருத்துக்களை அவர் தெரிவித்து இருந்தார்.இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாளும், வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திருமாவளவன் திகைத்து நிற்கிறார். சட்டசபையில் சிலர் 'இவில்' குறித்துப் பேசியது உலகத்தின் காதுகளிலேயே விழுந்தது. உங்கள் காதுகளை அது எட்டவில்லையே, ஏன்?. தற்குறி என்றெல்லாம் வன்ம கோஷம் பாடியது வாழ்த்துக்குரிய செயல் என்று எண்ணிவிட்டீர்களோ அண்ணா?.
ஷோபா மாடல் என்று சுத்தப் பொய்ச் சூத்திரம் சொல்லி உங்களையும் அந்த அவதூறுப் பட்டியலில் சேர்த்தது அக மகிழச் செய்யும் செயலா அண்ணா?. பிளாஸ்டிக் சேர் போட்டவர்களின் பிளாஸ்டிக் அரசியல் பிதற்றலை இன்னுமா உணரவில்லை அண்ணா?. எங்கள் மக்கள் தலைவர் ஆட்சியின் அங்கமாக பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா அண்ணா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.