தமிழக செய்திகள்

ஐஸ் வியாபாரியை அடித்துக்கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய மைத்துனர்கள் 2 பேர் கைது

குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் முருகனிடம் காசி அம்மாள் கூறினார். இதனால் மாமியார் மற்றும் மருமகன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45) ஐஸ் வியாபாரி. அவருடைய மனைவி பொன்மொழி (43). இவரது வீட்டின் அருகில், பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) வீடு உள்ளது. முருகன், பொன்மொழி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. அதன்படி சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அறிந்ததும், காசி அம்மாள் அங்கு சென்று தட்டிக்கேட்டார். மேலும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறும் முருகனிடம் கூறினார். இதனால் மாமியார் மற்றும் மருமகன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து முருகன் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் காசி அம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே காசி அம்மாள். நடந்த விவரம் குறித்து தனது மகன்களான பழனிசாமி (51), பாண்டியன் (41) ஆகிய 2 பேரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் முருகன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த முருகனிடம் எதற்காக எங்களது தாயை தாக்கினாய் என்று கேட்டனர். இதுதொடர்பாக அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், தனது மைத்துனர்கள் 2 பேரையும் தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து பாண்டியன். அங்கு கிடந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. தொடர்ந்து அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, முருகன் விபத்தில் படுகாயம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்த பல்லடம் போலீசார் அங்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே முருகனை அவரது மைத்துனர்களே அடித்துக்கொன்று விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, பாண்டியன், பழனிசாமி ஆகிய 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர்கள் 2 பேரும், போலீசாரின் தீவிர விசாரணையில் முருகனை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எங்களது தாய் காசி அம்மாளை முருகன் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 2 பேரும், இதுதொடர்பாக அங்கு சென்று கேட்டோம். அப்போது முருகன் எங்களையும் தாக்க முயன்றார். இதனால் அவரை அடித்துக்கொன்றுவிட்டோம். மேலும் விபத்தில் அவர் படுகாயம் அடைந்ததாக நாடகமாடினோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான 2 பேரும். பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஐஸ் வியாபாரியை கொன்று விபத்து நாடகமாடிய மைத்துனர்கள், கைது செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.