தமிழக செய்திகள்

சிலிண்டர் தட்டுப்பாடு: சமையல் கியாசை சேமிக்கும் வழிகள் என்னென்ன...?

வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகத்திலும் காலதாமதம் ஆகி வருகிறது.

சென்னை,

நாடுமுழுவதும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகத்திலும் காலதாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் 10 வழிகளை பின்பற்றினால் சமையல் கியாசை சேமிக்கலாம்.

அதற்கான ஆலோசனைகளை தெரிந்து கொள்ளுங்கள்:-

1. உணவுகளை சமைக்க பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். இது சமைக்கும் நேரத்தை 70 சதவீதம் வரை குறைக்கிறது. குறிப்பாக பருப்பு, பீன்ஸ், இறைச்சி, உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.

2. பருப்புகள், பீன்ஸ், அரிசியை நன்றாக ஊற வையுங்கள். இவ்வாறு ஊற வைக்கப்பட்ட தானியங்கள் 30 முதல் 50 சதவீதம் வரை விரைவாக வெந்துவிடும். இதனால் நேரம், எரிபொருள் இரண்டும் மிச்சமாகும்.

3. சரியான பர்னர் (எரித்தல்) அளவை பயன்படுத்துங்கள். பெரும்பாலான இந்திய கியாஸ் அடுப்புகள் பல்வேறு வகையான பர்னர்களை பயன்படுத்துகிறது. சிறிய பர்னரை தேநீர் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தலாம். பெரிய பர்னரை தண்ணீரை கொதிக்க வைத்தல், குக்கர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். சிறிய பாத்திரங்களை பெரிய பர்னரில் வைத்தால் கியாஸ் விரயம் ஆகும். மேலும் தீப்பிழம்பு பாத்திரத்தை தாண்டி வெளியே வராத அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும்.

4. எப்போதும் பாத்திரங்களை மூடிவைத்து வேக வைக்க பழகிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதின் மூலம் 30 சதவீத எரிபொருளை மிச்சமாக்க முடியும். வெளியே செல்லும் வெப்பம் உள்ளேயே இருக்க செய்வதால் தானியங்கள் விரைவாக வெந்துவிடும்.

5. காய்கறியை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவை விரைவாக வேகும். உதாரணத்துக்கு உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்தால் விரைவாக வெந்துவிடும். அதை நறுக்காமல் வேகவைத்தால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

6. பல்வேறு தானியங்களை ஒரே குக்கரில் வேக வையுங்கள். அதாவது. அடிப்பகுதியில் பருப்பு, அதற்கு மேல் ஒரு பாத்திரத்தில் அரிசி, சிறிய பாத்திரத்தில் காய்கறி வேக வைக்கலாம். இதன் மூலம் எரிபொருளை சேமிக்க முடியும்.

7. பர்னர்களை சில வாரங்களுக்கு ஒரு முறை தூய்மைப்படுத்த வேண்டும். அதில் ஏதாவது அடைப்பு இருந்தால் கியாஸ் விரயமாகும்.

8. பல்வேறு உணவு தானியங்கள் அடுப்புகளை அணைத்த பிறகும் சிறிது நேரம் வரை அந்த வெப்பத்தில் வேகும். அதனால் 3 நிமிடங்க ளுக்கு முன்பே அடுப்பை அணைத்தால் அதன் மூலம் எரிபொருளை சேமிக்கலாம்.

9. குக்கர்கள் அல்லது பாத்திரங்களின் அடித்தளம் கனமானதாக இருந்தால் வெப்பம் ஒரே சமமாக பாத்திரத்துக்குள் பரவும். இதனால் தானியங்கள் விரைவாக வேகும். குறிப்பாக தடித்த அடித்தளம் கொண்ட துருப்பிடிக்காத எக்கு பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

10. ஸ்மார்ட்டான முறையில் சமைக்க வேண்டும். அதாவது, தேநீர், பாஸ்தாவுக்கு மின்னணு கெட்டிலை பயன்படுத்தலாம். பல தானியங்களை ஒரே பாத்திரத்தில் தனித்தனி சிறிய பாத்திரத்தில் வைத்து வேக வைக்கலாம்.