தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துணை ஆணையாளர் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் .எச்.ஆர்.கௌஷிக், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127, 135 மற்றும் 138க்குட்பட்ட பகுதிகளில் பூங்கா மற்றும் நடைபாதை மேம்பாட்டுப் பணி, பால பணி, போக்குவரத்து சந்திப்பு மற்றும் சாலை மையத்தடுப்பு மேம்பாடு, கால்வாய் மேம்பாடு, அம்மா உணவகம், உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இன்று (17.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை

மத்திய வட்டார துணை ஆணையாளர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட தைஷா பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணி மற்றும் பூங்காவின் வெளிப்புற பகுதியில் நடைபாதை மேம்படுத்தும் பணி, காளியம்மன் கோயில் தெருவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் பால பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, விருகம்பாக்கம் கால்வாயினை பார்வையிட்டு, இக்கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, கோயம்பேடு மார்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு, உணவு பொருட்களின் இருப்பு மற்றும் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

பூங்கா அமைக்கும் பணி

பின்னர், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியினையும், கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து சந்திப்பு மற்றும் வார்டு-135க்குட்பட்ட அசோக் பில்லர் பகுதியில் போக்குவரத்து சந்திப்பு ஆகிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்தும் பார்வையிட்டு, அப்பகுதியில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில், அதிக அளவில் செடிகள் நட்டு பராமரித்திடவும், மழைநீர் வடிகால்களுக்கான வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மழைநீர் எளிதாக செல்லும் வகையில் வண்டல்களை அகற்றி சுத்தம் செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வார்டு-138ல் திறந்தவெளி இடத்தில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.