தமிழக செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர்களில் 25% பேர் கோடீஸ்வரர்கள், 18% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 11% மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் கொண்டவர்கள் எத்தனை பேர்? கோடீஸ்வரர்கள் எத்தனை பேர்? என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த அறிக்கையின்படி, பகுப்பாய்வு செய்யப்பட்ட 3,992 வேட்பாளர்களில், 722 (18%) வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். இவர்களில், 404 (10%) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அ.தி.மு.க.வின் 170 வேட்பாளர்களில் 118 பேர்(69%), தமிழக வெற்றி கழகத்தின் 231 வேட்பாளர்களில் 92 பேர்(40%), தி.மு.க.வின் 175 வேட்பாளர்களில் 70 பேர்(40%), பா.ஜ.க.வின் 33 வேட்பாளர்களில் 16 பேர்(48%), காங்கிரஸ் கட்சியின் 28 வேட்பாளர்களில் 14 பேர்(50%), பாட்டாளி மக்கள் கட்சியின் 18 வேட்பாளர்களில் 9 பேர்(50%), தே.மு.தி.க.வின் 10 வேட்பாளர்களில் 5 பேர்(50%), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்களில் 3 பேர்(60%) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்களில் 4 பேர்(80%) ஆகியோர் தங்களது பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.

அதே போல், வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 28 வேட்பாளர்களில் 27 பேர்(96%), தி.மு.க.வின் 175 வேட்பாளர்களில் 170 பேர் (97%), அ.தி.மு.க.வின் 170 வேட்பாளர்களில் 160 பேர்(94%), பா.ஜ.க.வின் 33 வேட்பாளர்களில் 31 பேர் (94%), பா.ம.க.வின் 18 வேட்பாளர்களில் 16 பேர் (89%), தே.மு.தி.க.வின் 10 வேட்பாளர்களில் 10 பேரும்(100%), த.வெ.க.வின் 231 வேட்பாளர்களில் 156 பேர்(68%) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்களில் 3 பேர் (60%) ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை அறிவித்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.17 கோடி ஆகும். இது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ரூ.1.72 கோடியாக இருந்தது.

மேலும் அந்த அறிக்கையின்படி, 1,711 வேட்பாளர்கள்(43%), தங்களது கல்வித் தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளதாகவும், 1,822 வேட்பாளர்கள்(46%) பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். அதே சமயம், தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை போட்டியிடும் வேட்பாளர்களில் 442 பேர்(11%) மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.