சென்னை,
திமுக தலைமை கழக பேச்சாளர் பொறுப்பில் இருந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். அதேவேளை, ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று திமுக நிர்வாகியின் கட்பீஸ் பழனியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். அப்போது அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்தார்.
சில பேருக்கு சொன்னால் புரியும்... சில பேருக்கு அனுபவித்தால்தான் தெரியும். ஆனால் தமிழக மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு உதாரணம் இந்த 2026 தேர்தல்.
திமுக தொடங்கி 75 ஆண்டு காலத்தில் தமிழகத்திற்கும், மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை கொடுத்தோம். கடந்த 5 ஆண்டில் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அள்ளி வழங்கினார். ஒருநாளைக்கு 24 மணிநேரம் அதில் 21 மணிநேரம் மக்களுக்காக உழைத்து தன் வாழ்வை தேய்த்துக்கொண்டவர் மு.க.ஸ்டாலின் தவிர இந்த உலகின் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மக்களுக்கு பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு உதாரணம் என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.