தமிழக செய்திகள்

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. திடீர் ஐதராபாத் பயணம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

மீனம்பாக்கம்,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருப்பது பாதுகாப்பானது இல்லை என்று கருதி, காங்கிரஸ் தலைமை உடனடியாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும்படி உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் விஸ்வநாதன், ஜமால் முகமது யூனுஸ், தாரகை கத்பர்ட் ஆகிய 4 பேரும் திடீரென புறப்பட்டு சென்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன், இவர்களுடன் செல்லவில்லை. அவர் ஏற்கனவே பெங்களூரு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பாதுகாப்பாக காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானா மாநிலத்தில் தங்கி இருந்து விட்டு, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாள் அன்று சென்னைக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT