தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் 17½ சவரன் தங்க நகைகள் மீட்பு; 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் ஒரு முதியவர் வீட்டின் கதவை உடைத்து 18½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு மீட்கப்பட்ட 17½ சவரன் தங்க நகைகள் உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டது.

முதியவர் புகார்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌந்தரபாண்டியபுரம் பகுதியில், கடந்த 6.8.2026 அன்று இரவு வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலுவைதாசன் (வயது 83) என்பவர் அளித்த புகாரின் பேரில் ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

18½ சவரன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் பணம் திருட்டு

சம்பவத்தன்று வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினர் இரவு வீட்டை பூட்டிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 18½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், இதேபோன்ற முந்தைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய நபர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சம்பவ நேரத்தில் அவர்களது செல்போன்களின் இருப்பிடத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சுரேஷ் (வயது 34), மாரிமுத்து(24), பாலகிருஷ்ணன்(25), முத்துராஜ்(22), மாசானம்(46), மணிகண்டன்(34), மைக்கேல் அந்தோணி பிரகாஷ்(36) மற்றும் முத்துமாரி(39) ஆகிய 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சுரேஷ், மாரிமுத்து மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முத்துராஜ், மணிகண்டன் மற்றும் மைக்கேல் அந்தோணி பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த மாசானம் மற்றும் முத்துமாரி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

17½ சவரன் தங்க நகைகள் மீட்பு, 8 பேர் கைது

கைது செய்யப்பட்ட மாசானம் மற்றும் முத்துமாரியிடமிருந்து, இந்த வழக்கில் திருடப்பட்ட தங்க நகைகளில் 17½ சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்கள் அடையாளம் கண்டு உறுதி செய்தனர். தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து 8 பேரை கைது செய்து, திருடப்பட்ட தங்க நகைகளை மீட்ட ராதாபுரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.