சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த 2-ந்தேதி முடிந்த நிலையில், திடீரென மூன்றாம் பகுதியாக வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் சிறப்பு கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தும் கூட, அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவதில் மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது.
கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் அபினியம் என்ற பெயரிலான 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான செயல்களில் இறங்குவதற்குரிய அரசியலமைப்பு சட்ட திருத்தங்களை நிறைவேற்றுவது இதன் முக்கிய நோக்கம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக நாடாளுமன்ற இடங்களை அதிகப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளார்கள்.
தென் மாநிலங்களின் அதிகாரங்களை குறைக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை கூட்டுகிறோம் என்ற போர்வையில், ஒப்பீட்டளவில் தென்மாநிலங்களுக்கு குறைவான இடங்களும், வடமாநிலங்களுக்கு அதிக இடங்களும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற கூட்டமும், அதில் நிறைவேற்றப்படவிருக்கும் சட்டத்திருத்தங்களும், சட்ட விரோதம், ஜனநாயக விரோதம், நியாய விரோதம், பாசிச ஆபத்து. பேராபத்தைத் தடுக்கவேண்டியது முக்கியம். சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதுடன் ஜனநாயக கடமை முடிந்துவிட்டது என்று மக்கள் கருதிவிடக்கூடாது. இதனால் பாதிக்கப்படவிருப்பது தென்மாநிலங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும், அதன் ஜனநாயகமும். எனவே இந்த பேராபத்தை தடுக்கவேண்டியது அவசரம், அவசியம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.