சென்னை,
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகாரில் உள்ள முரண்பாடுகளைக் களையவும், முழு உண்மையை வெளிக்கொண்டு வரவும் மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது ஐகோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள்த்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் புகாருக்கு முழுமையான தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகத்திற்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனை தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு பெருமாள் முருகன் அவர்களே நூல் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிப்பதாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது பல்வேறு முரண்பட்ட சந்தேகங்களை எழுப்புகிறது.
நூலகக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கே தெரியாமல் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதா? அல்லது அவர்களின் எதிர்ப்பையும் மீறி போலி நூல்கள் வாங்கப்பட்டதா ? இல்லாத பதிப்பகத்தின் பெயரில் நூல்கள் வாங்கப்பட்டுள்ளது என்றால், யாருடைய உத்தரவின் பெயரில் நூல்கள் பரிந்துரைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன? தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவுலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்களும், அதிகாரிகளும் நூல்கள் குறித்து ஆய்வு செய்யத் தவறியது ஏன்? என அடுத்தடுத்த கேள்விகள் எழுந்து கொண்டே செல்கின்றன.
நூல் பரிந்துரை, நூலகத் தேர்வுக் குழுவின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மற்றும் விலை பேச்சுவார்த்தை குழுவால் விலை இறுதி செய்யப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நூல்கள் பெரியார் நூலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த பிப்ரவரி மாதமே பிறப்பித்ததற்கு ஆவணங்களே ஆதாரமாக உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் தேதியிட்ட போலி நூல்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வந்தது எப்படி ? எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது ? அறிவுலகத்திற்கு வந்திருக்கும் நூல்கள் பரிந்துரைத்த நூல்கள் தானா? என்பதை சீல் இடுவதற்கு முன் அதிகாரிகள் ஏன் பார்க்கவில்லை? அல்லது இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும் துணை போனார்களா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அகல்விளக்கு எனும் பதிப்பகத்தின் பெயரில் திரிஷா விஜய், சங்கீதா விஜய், சுமேகா விஜய், விஜய் பாலு, விஜய் ஆதித்தன் என பெயர்களில் எழுதப்பட்டுள்ள நூல்கள் என்பதை தாண்டி, இந்த புத்தகங்கள் முதல்-அமைச்சர் விஜய் பிறந்த நாள் அன்று வந்திருப்பதும், பெரும்பாலான புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயர் விஜய் என்றே இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, இது யாரையோ சிக்கவைக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்க முயன்றுள்ளார்களா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
போலி நூல்கள் கொள்முதல் செய்ததற்கான ஆணை, அதற்கான உத்தரவு பிறப்பித்தவர்களின் விவரங்கள், செலவழிக்கப்பட்ட தொகை என அனைத்து விவரங்களையும் கணப்பொழுதில் வெளியிடும் அளவிற்கான நிர்வாக வசதியை கொண்டிருக்கும் தவெக அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அமைச்சரை அனுப்பி புகார் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தான் ஏற்கனவே இருக்கும் சந்தேகங்களை இன்னமும் வலுவாக்குகின்றன.
எனவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் அறிவுத்திறனையும் உலக அரங்கில் கேள்விக்குறியாக்கும் வகையில் நடைபெற்றிருக்கும் இந்த போலி நூல் கொள்முதல் ஊழலில் முழு உண்மை வெளிவர வேண்டும் எனில் இந்த ஊழல் குற்றச்சாட்டில் பெரும்பங்கு வகிக்கும் புத்தகங்கள் தவெக அரசு அமைந்தவுடன் பெறப்பட்டுள்ளதால், இந்த ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு விசாரிக்காமல் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலமாகவோ அல்லது ஐகோர்ட்டின் நேரடி மேற்பார்வையிலோ விசாரணை நடைபெறுவது தான் சரியான தீர்வாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.