தமிழக செய்திகள்

‘மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்... விஜய் வரலாறு படைத்துள்ளார்’ - மு.க.அழகிரி மகள் கயல்விழி பேட்டி

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என கயல்விழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில், மு.க.அழகிரியின் மகளும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேத்தியுமான கயல்விழி, இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“முதல்-அமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த விழாவில் கலந்து கொண்டேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு புதிய வரலாறு படைத்துள்ளார். புதிதாக அரசியலுக்கு வந்த ஒருவர், புதிய கட்சியை ஆரம்பித்து, இரண்டரை ஆண்டுகளில் மக்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளார். ஆனால் மக்களின் செல்வாக்கு அவருக்கு முழுமையாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.