தமிழக செய்திகள்

மன்னார்குடி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சர் விஜய்

விபத்தில் காயமடைந்த மாணவருக்கு சிறப்பான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இன்று (11.06.2026) மாலை 4.40 மணியளவில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் யோகேஸ்வரன்(வயது 12), த/பெ. முருகேசன், ரச்சித்(வயது 12), த/பெ. முகேஷ் மற்றும் ராஜமுரளி(வயது 12), த/பெ. ரமேஷ் ஆகியோர் மீது தவேரா வாகனம் மோதிய விபத்தில், மாணவர்கள் கடுமையான உடல் காயம் அடைந்து ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் மற்ற இரு மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஹிருத்திக்(வயது 11), த/பெ. நாகல்ராஜ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT