தமிழக செய்திகள்

முகூர்த்தம், சிறப்பு நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

இந்த வார இறுதியில் இன்று 5,676 பயணிகளும், நாளை 10,853 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று முகூர்த்த நாள், 15,16,17 விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை,திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 80 பஸ்களும், நாளை 15-ந் தேதி 620 பஸ்களும், 16-ந் தேதி 655 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 25 பஸ்களும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 5,676 பயணிகளும், நாளை 10,853 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். கூடுதலாக சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் வசதியாக பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.