தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக கவுன்சிலருக்கு சம்மன்

திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முதல்-அமைச்சர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தபோதிலும் அவரது பேச்சை குறுக்கிட்டு நிறுத்தவில்லை என்று தவெகவினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரில் 3 பிரிவுகளில் சுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மன் அனுப்பியது காவல்துறை.

SCROLL FOR NEXT