காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது40). பா.ம.க ஒன்றிய செயலாளரான இவர் தற்போது மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். ராஜேஷ், காட்டுமன்னார் கோவில் வருவாய்த்துறையில் 6 நாட்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றிருந்தார். அதன்படி அவர் கண்டமங்கலம் பகுதியில் உள்ள நாரைகால் ஏரியில் வண்டல் மண் எடுத்து தனது நிலத்தில் அடித்து வருகிறார்.இதற்காக அந்த ஏரியில் ஒரு பொக்லைன், 10 டிராக்டர்கள் மூலம் வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. சம்பவத்தன்று ராஜேஷ், நாரை ஏரியில் வண்டல் மண் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கடலூர் தெற்கு மாவட்ட த.வெ.க இணை செயலளார் புலவேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவர், ராஜேசிடம், இப்போது நாங்கள் தான் அரசு. ஏரி மண் எடுப்பதால் தங்களுக்கு கட்சி நிதியாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது.அதற்கு ராஜேஷ் நாங்கள் முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுக்கிறோம். பிறகு எதற்காக நாங்கள் பணம் தர வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு தரவில்லை என்றால் அதிகாரிகளிடம் தெரிவித்து வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்துவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் த.வெ.க.வினர் மண் அள்ளிய விவசாயியிடம் கட்சி நிதி கேட்ட தகவல் கண்டமங்கலம் முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் த.வெ.க. நிர்வாகியின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்தநிலையில், இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த பலரும் இந்த செயலை கண்டித்தனர். அரசியல் கட்சியினரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விவசாயியிடம் வண்டல் மண் அள்ள லஞ்சம் கேட்ட கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரனை கட்சியில் இருந்து நீக்கி, கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சீனுவாசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக்கழக கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளராக உள்ள புலவேந்திரன் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், கழக தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒப்புதலோடு கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.